புதர்கள் நிறைந்த பி.எஸ்.என்.எல். குடியிருப்பு
கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் புதர்கள் நிறைந்து உள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் புதர்கள் நிறைந்து உள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலுவலர் குடியிருப்புகள்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் மூலம் தொலைபேசி மற்றும் அலைவரிசை சேவை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் குடும்பத்தினர் தங்குவதற்காக கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலர் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது.
இதை சுற்றி ஏராளமான பொதுமக்களின் வீடுகளும் உள்ளன. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலர் குடியிருப்புகள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் வீடுகளுக்குள் ஒழுகுகிறது. இதனால் அலுவலர்கள் , பணியாளர்கள் குடும்பத்தினர் கடும் சிரமத்துடன் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் சிலர் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர்.
புதர்கள் சூழ்ந்தன
மேலும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் குடியிருப்புகள் உள்ள வளாகம் முழுவதும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக விளங்குகிறது. மேலும் சில சமயங்களில் இரவில் சிறுத்தை, புலி நடமாட்டமும் தென்படுகிறது. இதனால் காடுகள் போல் வளர்ந்து காணப்படும் புதர்களை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இனிவரும் நாட்களில் புதர்களை வெட்டி வளாகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் பி.எஸ்.என்.எல். அலுவலர் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என பணியாளர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்து உள்ளனர்.