புதர்மண்டி கிடக்கும் வாகன நிறுத்தம்
பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே கடந்த சில மாதங்களாக வாகன நிறுத்தம் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் நினைவை போற்றும் வகையில் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கேரள மாநிலத்தில் உள்ள தேக்கடியில் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் இந்த மணி மண்டபத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இந்த மணி மண்டபம் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக கழிப்பிட வளாகம் அருகே கார் நிறுத்தம் அமைக்கப்பட்டது கடந்த சில மாதங்களாக இந்த கார் நிறுத்தம் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
இதனால் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் இந்த கழிப்பறை வளாகம் தற்போது திறக்கப்படாமல் காட்சி பொருளாக பூட்டியே உள்ளது. இதனால் இந்த மணி மண்டபத்தை காண வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் கழிப்பிட வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வாகன நிறுத்தம் பகுதியில் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.