தொழில் கடன் முகாம்


தொழில் கடன் முகாம்
x

நெல்லையில் வருகிற 2-ந் தேதி வரை தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும். இந்த கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இந்த கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 17-ந்தேதி தொடங்கி வருகிற செப்டம்பர் 2-ந் தேதி வரை நெல்லை வண்ணார்பேட்டை ஓட்டல் சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் 2-வது மாடியில் நெல்லை கிளை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1½ கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் முகாமின் சிறப்பு அம்சமாக வருகிற 27-ந் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நெல்லை மண்டலத்தின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் இணைந்து நடத்தும் சிறப்பு தொழில் கடன் விழா வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story