மறைமலைநகர் அருகே தொழில் அதிபர் வெட்டிக்கொலை


மறைமலைநகர் அருகே தொழில் அதிபர் வெட்டிக்கொலை
x

மறைமலைநகர் அருகே தொழில் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மறைமலைநகர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள அனுமந்தபுரம் அகோரா வீரபத்திர கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 30). இவர் சொந்தமாக லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் அனுமந்தபுரம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கொண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்லும்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் மனோகரனை வழிமறித்து வீச்சரிவாளால் வெட்டினர். மனோகரன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஆட்டு கொட்டகையில் பதுங்கி கொண்டார்.

ஆனால் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச்சென்ற அந்த கும்பல் ஆட்டுக்கொட்டகையில் பதுங்கி இருந்த மனோகரனை சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த மனோகரன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் கொலையான மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்தார்களா? மனோகரன் போக்குவரத்து பெண் போலீசிடம் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த படுகொலை நடைபெற்றதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த பூபாலன் (26), அருண்குமார் (24), அஜித்குமார் (26), சிறுகுன்றம் காலனியை சேர்ந்த அபினேஷ் (24), கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (26) ஆகிய 5 பேரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story