8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத பஸ் நிலையம்
பல்லடம் அருகே 8 ஆண்டுக்கு முன்பு திறப்பு விழா நடத்தியும் காரணம்பேட்டை பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் போனது.
காரணம்பேட்டை பஸ் நிலையம்
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணம்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ரூ.1 கோடியே 78 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் 16.6.2015-ல் திறந்து வைத்தார். அந்த பஸ் நிலைய வளாகத்தில் இரண்டு சக்கர வாகன நிறுத்தம், வணிக வளாகம், சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இந்த பஸ் நிலையம் காரணம்பேட்டை நால்ரோட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் இருப்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் இருப்பதாலும் பொதுமக்கள் பயன்படுத்தவில்லை. போக்குவரத்துத் துறையினர் அரசு பஸ்கள் உள்ளே சென்று வர உத்தரவிட்டும் பயணிகள் யாரும் இல்லாததால் அரசு பஸ்கள் தொடர்ந்து அங்கு செல்வதில்லை. தனியார் பஸ்களும் காரணம்பேட்டை நால்ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றன. இதனால் இந்த பஸ் நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது.
இதனால் இந்த பஸ் நிலையம் கடந்த 2020-ல் காய்கறி சந்தையாக்கப்பட்டது. இதனால் கோடங்கிபாளையம், இச்சிபட்டி, பருவாய், கரடிவாவி, சுக்கம்பாளையம், செம்மிபாளையம், காடாம்பாடி, காங்கயம்பாளையம் மற்றும் சூலூர் விமானப்படை தள குடியிருப்பு பகுதி உள்ளடக்கிய மக்கள் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்தனர். எனவே காரணம்பேட்டையில் பயன்படாமல் உள்ள பஸ் நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
8 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத பஸ் நிலையம்
இதுகுறித்து காரணம்பேட்டையைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி கூறும்போது "பயன்பாடு இல்லாமல் இருக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும். மேலும் கால்நடை சந்தையும் செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்றார்.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறும்போது "பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் ஜவுளி சந்தை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, ஜவுளி சந்தையாக மாற்ற வேண்டும்" என்றார்.
இதுகுறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிச்சாமி கூறும்போது "பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. ஊராட்சி நிர்வாகம் தரப்பில், சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத் துறை இணைந்து, பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.