நம்பியூரில் பரபரப்பு வீட்டுக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம்


நம்பியூரில் பரபரப்பு  வீட்டுக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம்
x

நம்பியூரில் வீட்டுக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் செய்ததில் 2 மணி நேரம் என்ஜினீயர் குடும்பத்தினர் தவியாய் தவித்தனர்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூரில் வீட்டுக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் செய்ததில் 2 மணி நேரம் என்ஜினீயர் குடும்பத்தினர் தவியாய் தவித்தனர்.

என்ஜினீயர்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையம் எதிரே வசித்து வருபவர் வினோத் (வயது 32). கட்டிட என்ஜினீயர். இவருடைய மனைவி பவித்ரா. வினோத் தனது வீட்டில் தாய், தந்தை மற்றும் 2 வயது குழந்தையுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் குரங்கு ஒன்று வினோத் வீட்டுக்குள் புகுந்தது. அந்த குரங்கானது வீட்டின் முன்புற அறை கதவை எப்படியோ திறந்து வந்து உள்ளது.

அட்டகாசம்

அந்த கதவானது தானாக அடைக்கும் தன்மை கொண்டது. குரங்கு வீட்டுக்குள் வந்ததும், கதவு தானாக அடைத்து விட்டது. இதனால் குரங்கால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இதனிடையே குரங்கை கண்டதும், வினோத், அவருடைய மனைவி பவித்ரா மற்றும் வீட்டில் இருந்தவர்கள் குரங்கை விரட்ட முயன்றனர். ஆனால் குரங்கு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அவர்களை பாய்ந்து கடிப்பது போல் பாவனை செய்தது. இதனால் பயந்து போன அவர்கள் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டனர். இதனால் வீட்டின் சமையல் அறைக்கு சென்ற குரங்கு அங்கிருந்த சாப்பாடு மற்றும் பழங்களை எடுத்து தின்றது. மேலும் பாத்திரங்களை ஒவ்வொன்றாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்தபடி தூக்கி வீசியது. பின்னர் முன்புற அறைக்கு வந்த குரங்கு அங்கிருந்த துணிகளை கிழித்து அட்டகாசம் செய்தது. பின்னர் டி.வி. மேல் உட்கார்ந்தபடி பொருட்களை தூக்கி எறிந்தது.

பரபரப்பு

இதுபற்றி நம்பியூர் தீயணைப்பு நிலையம் மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு வினோத் தகவல் தெரிவித்தார். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து வினோத் வீட்டின் கதவை திறந்தனர். அப்போதும் குரங்கு வெளியே செல்லாமல் பொதுமக்கள் மீது சினத்துடன் பாய்வது போல் பாவனை செய்தது. இதனால் அவர்களும் குரங்கை விரட்டும் முயற்சியை கைவிட்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் வீட்டில் இருந்து தானாகவே குரங்கு வெளியே சென்றது. 2 மணி நேரம் அட்டகாசம் செய்த குரங்கால் வீட்டை விட்டு என்ஜினீயர் குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவியாய் தவித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story