ஆசனூர் அருகே பரபரப்பு: கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை
ஆசனூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி
ஆசனூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
10 வனச்சரகங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிடுவது வாடிக்கையாகி வருகிறது.
கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூரை அடுத்த அரேபாளையம் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள வீதியில் உலா வந்தது. வீதியில் உலா வந்த யானையை கண்டதும், அந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்தனர். கிராமத்தில் அங்கும், இங்குமாக உலா வந்த யானையானது, 1 மணி நேரத்துக்கு பிறகு தானாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கிராமத்துக்குள் யானை புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.