பவானி அருகே பரபரப்பு தறிகெட்டு ஓடிய கார் மொபட்-மின்கம்பம் மீது மோதியது; 2 பேர் படுகாயம்-டிரைவர் கைது


பவானி அருகே பரபரப்பு  தறிகெட்டு ஓடிய கார்   மொபட்-மின்கம்பம் மீது மோதியது;  2 பேர் படுகாயம்-டிரைவர் கைது
x

பவானி அருகே தறிகெட்டு ஓடிய கார் மொபட், மின்கம்பம் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு

பவானி

பவானி அருகே தறிகெட்டு ஓடிய கார் மொபட், மின்கம்பம் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தறிகெட்டு ஓடிய கார்

பவானி புன்னம் அருகே உள்ள நாரபாளையம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகன் சக்திவேல் (வயது29), செங்கோடன் மகன் நந்தகோபால் (26). இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழிலாளிகள்.

இந்த நிலையில் சக்திவேலும், நந்தகோபாலும் ஜம்பை பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு் வெளியே வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டில் ஏறி புறப்பட தயாரானார்கள். அப்போது அந்த வழியாக ஆப்பக்கூடலில் இருந்து பவானி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென தறிகெட்டு ஓடியது.

மொபட் மீது மோதல்

திடீரென அந்த கார் சக்திவேல், நந்தகோபால் ஆகியோரின் மொபட் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 மோட்டார்சைக்கிள்களும் தூக்கி வீசப்பட்டதில் சேதமடைந்தன. மேலும் நிலை தடுமாறிய கார் அருகே இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதனால் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது.

மின்இணைப்பு துண்டிப்பு

உடனே மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த விபத்து காட்சி அங்குள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2பேரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பவானி போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான ஈரோடு பகுதியைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் (60) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story