கோபி அருகே பரபரப்பு வங்கியில் கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோபி அருகே பரபரப்பு வங்கியில் கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jun 2023 2:59 AM IST (Updated: 20 Jun 2023 8:37 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே பரபரப்பு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது

ஈரோடு

கோபி அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி

கோபி அருகே உள்ள கூகலூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கூகலூர், குளத்துக்கடை, புதுக்கரை புதூர், கணபதிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர்.

இந்த வங்கியின் மேலாளராக தென்னரசு உள்ளார். 8 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த 17-ந் தேதி அன்று பணி முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கிக்கு யாரும் வரவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வந்து வங்கியின் கதவை திறந்து உள்ளனர். அப்போது வங்கியில் காற்றை வெளியேற்றும் மின் விசிறி (எக்சாஸ்டர் பேன்) உள்ள இடம் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எதுவும் திருடு போகவில்லை.

உடனே இதுபற்றி வங்கி ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமரா

விசாரணையில், 'வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த மர்ம நபர்கள் வங்கியின் பின்புறத்துக்கு சென்று உள்ளனர். அப்போது வெளிப்புற சுவற்றில் கண்காணிப்பு கேமரா இருந்ததை மர்ம நபர்கள் கண்டு உள்ளனர். அதில் தங்களுடைய உருவம் பதிவாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி உள்ளனர்.

இதையடுத்து பின்புற சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த காற்றை வெளியேற்றும் மின் விசிறியை உடைத்தனர். பின்னர் அந்த மின்விசிறியை தூக்கி வீசியதுடன், அதில் இருந்த சிறிய துவாரம் வழியாக வங்கிக்குள் நுழைந்து உள்ளனர். அவர்கள் வங்கியில் ஒவ்வொரு பகுதியாக சென்று நோட்டமிட்டதாக தெரிகிறது.

ஏமாற்றம்

வங்கியில் பணம் வைத்திருக்கும் பெட்டகம் மற்றும் நகை வைத்திருக்கும் பெட்டகம் ஆகியவை மிகவும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு உள்ளதை கண்டதும் அதில் இருந்து அவர்களால் எதையும் கொள்ளையடிக்க முடியவில்லை. எனினும் வங்கியில் காசாளர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அங்கும் எந்தவித பணமும் இல்லை. இதில் ஏமாற்றம் அடைந்த அவர்கள் எந்தவித பொருட்களையும் திருடாமல் வந்த வழியாக மீண்டும் தப்பி சென்றது,' ெதரியவந்தது.

தனிப்படை

மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. வங்கியில் இருந்து மோப்ப நாய் வீரா, மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர்களை பிடிக்க கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கோபி அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story