கோபி அருகே பரபரப்பு: முட்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்
கோபி அருகே பரபரப்பு முட்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்
கோபி அருகே முட்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
கோபி அருகே உள்ள சாணார்பாளையம் மற்றும் ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு-சத்தி ரோட்டில் உள்ள ஒத்தக்குதிரையில் நேற்று மாலை 3 மணி அளவில் ஒன்று திரண்டனர். பின்னர் முட்செடிகளை ரோட்டின் இருபுறமும் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே இதுபற்றி கோபி போலீசாருக்கும், பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசாரும், ஊராட்சி நிர்வாகத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக்கோரி...
அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'சாணார்பாளையம் மற்றும் ஒத்தக்குதிரை பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கு பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகிறது. இதனை உடனே அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, 'குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் ஈரோடு-சத்தி ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.