கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை


கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு  திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை
x

கள்ளக்குறிச்சி அருகே திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக 20-க்கும் மேற்பட்டவர்களின் விவசாய கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரின் ஒயர்கள் திருடு போய்க்கொண்டிருந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் விவசாய கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் ஒயரை வாலிபர் ஒருவர் திருடிக்கொண்டிருந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கப்பிடித்தனர். அப்போது அவர் தனது உடலில் ஒயரை சுற்றிவிட்டு அதன்மேல் சட்டையை அணிந்திருந்தது தெரியவந்தது.பின்னர் அந்த வாலிபரை அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருங்கூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story