சிவகிரி அருகே பரபரப்புதனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


சிவகிரி அருகே பரபரப்புதனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-26T01:01:15+05:30)

திடீர் சாலை மறியல்

ஈரோடு

சிவகிரி அருகே தனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

சிவகிரி கொல்லங்கோவில் அருகே உள்ளது கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம். இந்த பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று பகல் 11.30 மணி அளவில் சிவகிரி அருகே மூன்ரோடு பஸ் நிறுத்தத்தில் உள்ள ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அந்த வழியாக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த வெள்ளகோவிலில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் 2 தனியார் பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் அங்கு விரைந்து சென்றார். தகவல் அறிந்ததும் தனியார் பஸ் மேலாளர்களும் அங்கு சென்றனர்.

மீண்டும் இயக்கக்கோரி...

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் தனியார் பஸ் மேலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

ஈரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு செல்லும் சில தனியார் பஸ்கள் கொரோனாவுக்கு முன்பு கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம் பகுதிகளுக்கு வந்து சென்றது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு இந்த தனியார் பஸ்கள் எங்கள் பகுதிகளுக்கு வந்து செல்வதில்லை. இதனால் நாங்கள் ஈரோடு, வெள்ளக்கோவில் பகுதிகளுக்கு செல்ல பஸ்களின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு வராத இந்த தனியார் பஸ்களை மட்டும் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். உடனே இந்த பஸ்கள் எங்கள் பகுதிக்கு வழக்கம்போல் மீண்டும் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மேலாளர்கள்

பின்னர் தனியார் பஸ் மேலாளர்கள் கூறும்போது, 'வெள்ளகோவிலில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் தனியார் பஸ்களை மீண்டும் கொல்லங்கோவில், கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம் வழியாக இயக்குகிறோம்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம் வராத தனியார் பஸ்களை தவிர மற்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த ரோடு வழியாக தங்கு தடையின்றி சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story