தாளவாடி அருகே பரபரப்பு; அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தாளவாடி அருகே பரபரப்பு; அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 9:33 PM GMT (Updated: 20 Jun 2023 2:59 AM GMT)

தாளவாடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்

ஈரோடு

தாளவாடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ் இயக்கப்படவில்லை

தாளவாடியை அடுத்த தலமலை ஊராட்சியில் காளிதிம்பம், ராமர் அணை, இட்டரை, தடசலட்டி, மாவநத்தம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் செல்வது வழக்கம்.

இதேபோல் 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தலமலை மற்றும் ஆசனூரில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு காலை, மதியம், மாலை என 3 வேளைகளில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக இட்டரை மற்றும் தடசலட்டி கிராமத்துக்கு சாைல சரியில்லை என காரணம் கூறி அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

கோரிக்கை மனு

இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள், அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ள சாலையில் நடந்து பெஜலட்டி கிராமத்துக்கு சென்று அங்கிருந்து தலமலை மற்றும் ஆசனூர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர்.

இதைத்தொடர்ந்து தங்கள் கிராமங்களுக்கு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பஸ் சிறைபிடிப்பு

இந்த நிலையில் தடசலட்டி, இட்டரை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 7.45 மணி அளவில் பெஜலட்டி பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அந்த வழியாக தாளவாடி நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'எங்களுடைய கிராமங்களுக்கு தொடர்ந்து பஸ்சை இயக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு 9.45 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக தாளவாடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story