தாளவாடி அருகே பரபரப்பு தோட்ட காவலுக்கு இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விவசாயியை யானை மிதித்து கொன்றது
தாளவாடி அருகே தோட்ட காவலுக்கு இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்றது. அவரது உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. மேலும் அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (வயது 70). விவசாயி. இவருக்கு தர்மாபுரம் பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு வாழை சாகுபடி செய்துள்ளார்.
யானை மிதித்து கொன்றது
இந்தநிலையில் வனவிலங்குகளிடம் இருந்து பயிரை காக்க மல்லப்பா நேற்று முன்தினம் இரவு தோட்டத்து காவல் பணிக்கு சென்றார். அங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை மல்லப்பாவின் வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள வாழைக்குருத்துகளை தின்றும், வாழை மரங்களை மிதித்தும் நாசப்படுத்திக்கொண்டிருந்தது.
சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த மல்லப்பா வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு யானை நின்று கொண்டு வாழைகளை சேதப்படுத்திக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யானையை விரட்ட முயன்றார். அப்போது ஆவேசம் அடைந்த யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசியது. பி்ன்னர் அவரை காலால் மிதித்தது. இதில் மல்லப்பா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வனத்துறையினரை முற்றுகை
இந்த நிலையில் நேற்று காலை அவர் வெகு நேரமாக வீட்டுக்கு வராததால் உறவினர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது மல்லப்பா இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் வெகு நேரம் கழித்து அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அைந்த பொதுமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டனர்.
இதுபற்றி வனத்துறையினரிடம் பொதுமக்கள் கூறும்போது, 'கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரகுமார் நேரில் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்றனர். மேலும் உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ஆனால் வனக்கோட்ட அதிகாரி வராததால் அப்பகுதி மக்கள் தாளவாடியில் இருந்து திகினாரை செல்லும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் தாளவாடி போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் இதுபற்றி போலீசார் ஆசனூர் வனக்கோட்ட அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் வனக்கோட்ட அதிகாரி அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், 'யானை விவசாய தோட்டத்தில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மல்லப்பா உடலை எடுக்க அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தாளவாடி-திகினாரை ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.