வானூர் அருகே பரபரப்புகத்தி முனையில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறிப்பு'லிப்ட்' கேட்பது போல் நடித்து கைவரிசை
வானூர் அருகே கத்தி முனையில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்தது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 48). லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரட்டாண்டி அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த 2 பேர் 'லிப்ட்' கேட்டுள்ளனர்.
உடனே காசிநாதனும் லாரியை நிறுத்தி 2 பேரையும் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது திடீரென 2 பேரும் கத்தியை காட்டி காசிநாதனிடம் இருந்த ரூ.700 மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்தனர். தொடர்ந்து லாரியை நிறுத்தி அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
அப்போது காசிநாதன் வேலை பார்த்து வரும் கம்பெனியை சேர்ந்த மற்றொரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் தனது கம்பெனி லாரி நிற்பதை பார்த்து டிரைவர் காசிநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது காசிநாதன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து செல்போன், பணத்தை பறித்து சென்ற ஒருவரை மடக்கி பிடித்து வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ராஜகுமாரன் (40) என்பவரிடம் தான் செல்போன், பணம் உள்ளது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
'லிப்ட்' கேட்பது போல் நடித்து கத்திமுனையில் லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.