ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளதையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தானதால் வடமாநிலத்தை சேர்ந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
கோடை விடுமுறை
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோடை விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு சென்று படிப்பவர்கள், வெளியூர்களில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்ப்பவர்கள் என அனைவரும் கோடை விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு வந்தனர்.
பின்னர் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று உற்சாகமாக கோடை விடுமுறையை கழித்தனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்ததையொட்டி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் நேற்று புறப்பட்டனர்.
அலைமோதிய கூட்டம்
இதில் சென்னை, திருச்சி, ஈரோடு, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக அதிக அளவில் பயணிகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று குவிந்தனர். ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கை கிடைக்காதவர்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம் கிடைக்காவிட்டாலும் கதவுகள் அருகிலும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து கூட்டநெரிசலில் சிக்கியபடி பயணம் செய்தனர்.
ரெயில்களை தவறவிட்டவர்கள், முன்பதிவில்லா பெட்டிகளிலும் பயணம் செய்ய முடியாதவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் சென்றனர். இதனால் திண்டுக்கல் பஸ் நிலையத்திலும் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்ற பஸ்கள் நிரம்பியபடி வந்ததால், பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஓடிச்சென்று பஸ்சில் இடம்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் பலர் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே சென்றனர்.
வடமாநிலத்தவர்கள் தவிப்பு
இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து அவுரா வரை செல்லும் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் பயணம் செய்ய முடியாத வடமாநிலத்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இந்த வாரமாவது தங்கள் ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆவலில் நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் நேற்றும் அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த வடமாநிலத்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.