கூடலூர் பகுதியில் பரபரப்பு: வீடுகளை காட்டு யானைகள் முற்றுகை
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவில் வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து தொழிலாளி வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவில் வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து தொழிலாளி வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகள் முற்றுகை
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. தேவர்சோலை அருகே 8-ம் மைல் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பின்னர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் நுழைந்தது. தொடர்ந்து அங்கு விளைந்திருந்த பலாப்பழங்களை தின்றது.
பின்னர் விடியற்காலையில் அங்கிருந்து சென்றது. இதேபோல் கூடலூர்- ஓவேலி சாலையில் கெவிப்பாறை, கோக்கால் மலையடிவாரம் ஆகிய இடங்களில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் காலை, மாலை நேரத்தில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சில சமயங்களில் இரவில் வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பட்டாசுகளை வெடித்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினாலும் பலன் ஏற்படுவதில்லை.
தொழிலாளி வீடு சேதம்
இதேபோல் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோட்டுப்பாறையில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து தொழிலாளி ஒருவர் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அச்சத்தில் சத்தம் போட்டனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பலாப்பழ சீசன் காரணமாக காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. தற்போது கூடலூர் பகுதியில் மழைக்காலமாக உள்ளது. இதை பயன்படுத்தி வனப்பகுதியில் பலாப்பழ விதைகளை ஊன்ற வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில் வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு தேவையான பலாப்பழங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.