நெட்டி மாலை தயாரிக்கும் பணி மும்முரம்


நெட்டி மாலை தயாரிக்கும் பணி மும்முரம்
x

நெட்டி மாலை தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாரூர்

மாட்டு பொங்கலுக்கு கால்நடைகளை அலங்கரிக்க நெட்டி மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விலையில்லாமல் நெட்டி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாட்டு பொங்கல்

தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு என்றுமே தனி சிறப்புக்குரியது. பொங்கல் பண்டிகை என்றதும் நமது நினைவில் வருவது உழவுக்கு உறுதுணையான கால்நடைகள் தான். உழவன் வீட்டில் மாட்டு பொங்கல் என்றால் தனி உற்சாகம் தான். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசுவது, மாடுகளுக்கு புதிதாக கழுத்து கயிறு, மூக்கனாங்கயிறு, சலங்கையுடன் தாம்பு கயிறு மாற்றப்படும்.

மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம் ஈட்டு, கரும்பு, மாவிலை, நெல்லி, வேம்பு உள்ளிட்ட இலைகள் அடங்கிய மாலை அணிவிக்கப்படும். மேலும் கால்நடைகளுக்கான பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கலர்புல் நெட்டி மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். ஆனால் கால போக்கில் உழவுக்கு மாடுகள் பயன்படுத்திய காலம் மாறி அனைத்து பணிகளும் எந்திரமயமானது. இதனால் பல வீடுகளில் மாட்டு கொட்டகைகள் காணாமல் போய் டிராக்டர் கூடாரமாக மாறி போனது.

நெட்டி மாலைகள்

சில பகுதிகளில் மாடுகள் உதவியுடன் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லி கட்டிற்காக மாடுகளை போற்றி பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

தங்கள் குடும்பத்தின் கவுரவமாக கருதுகின்றவர்களும் இருந்து வருவதால் நமது கலாச்சாரம், பாரபரியமும் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மனித வாழ்வில் முக்கிய இடத்தை கால்நடைகள் பிடித்து வருகிறது.

மாட்டு பொங்கலுக்கு முக்கிய இடத்தை பிடிப்பது நெட்டி மாலைகள் தான். கலர் புல் நெட்டி மாலைகளை தயாரிப்பதற்கு ஒரு கிராமமே ஈடுபட்டு வருகிறது.

அது திருவாரூர் அருகே உள்ள கூடூர் ஊராட்சி நாரணமங்கலம் கிராமம் தான். இங்கு பெரும்பாலான வீடுகளில் நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நெட்டி என்பது தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. நெட்டிகள் குளத்தில் வளரக்கூடியது. மக்கள் பயன்படுத்தாத குளங்களில் தான் அதிகமாக நெட்டி கிடைக்கிறது. இந்த நெட்டி என்பது விலையில்லாமல் கிடைத்து வந்த நிலையில், தற்போது நெட்டி விலை கொடுத்து வாங்க கூடிய நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள குளங்களில் நெட்டி கிடைக்கிறது.

கலர் சாயம்

குளத்தில் இருந்து கொண்டு வரப்படும் நெட்டிகள் வெயிலில் பதப்படுத்தி காய வைக்கப்படுகிறது. பின்னர் நெட்டிகளை பல்வேறு வடிவில் வெட்டி கலர் சாயம் பூசப்படுகிறது. இந்த சாயம் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் தான் கிடைக்கிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற பிரதான கலராக பயன்படுத்தப்படுகிறது. கலர் சாயம் பூசப்பட்ட நெட்டிகள் வெயிலில் காய வைக்கப்படுகிறது.

மாட்டுபொங்கலை முன்னிட்டு கால்நடைகளை அலங்கரிப்பதற்காக நெட்டி மாலைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராகிறது. நெட்டி மாலைகளை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி செல்லும் வியாபாரிகள் அதிக விலையில் மக்களிடத்தில் விற்கப்படுகிறது. இதனால் நெட்டி மாலை உற்பத்தி செய்பவர்களுக்கு பெரிதான லாபம் இல்லாவிட்டால், ஆண்டிற்கு ஒரு முறை நெட்டி தயாரிப்பில் பரம்பரையாக ஒரு கிராமம் செய்து வருகிறது. எனவே விலையில்லாமல் நெட்டி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலர் கலராக நெட்டிகள்

நாரணமங்கலத்தை சேர்ந்த நெட்டி தயாரிக்கும் தொழிலாளர் புவனேஸ்வரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் நெட்டி மாலை தயாரிப்பதை பரம்பரை தொழிலாக செய்து வருகிறோம். இதற்கான பணிகளை நவம்பர் மாதம் தொடங்கி விடுவோம். நீர் நிலைகள் குறிப்பாக குளங்களில் வளரும் நெட்டி என்ற தாவரத்தினை அறுத்து வந்து அதனை பக்குவமாக காய வைப்போம். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி பல வண்ண சாயத்தில் நனைத்து கலர், கலரான நெட்டிகள் உருவாக்கி வருகிறோம்.

ரூ.5 முதல் ரூ.40 வரை விற்பனை

இதற்கான பணிகளை 2 மாதத்தில் முடித்து விடுவோம். இந்த மாலைகள் காசு மாலை, ரெட்டமாலை என பலவகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த பணிகளை முடித்து ஜனவரி மாதம் பிறந்தவுடன் விற்பனை தொடங்கி விடும். தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்த மாலைகள் ரூ.5 இருந்து ரூ.40 வரையில் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் மாலை எங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை தான் உள்ளது.

இதற்கான விலையை வியாபாரிகள் தான் முடிவு செய்கிறார்கள். அந்த நிலை தான் இருந்து வருகிறது. இதனால் சிலர் சைக்கிளில் நெட்டி மாலைகளை கட்டி கொண்டு ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 1 லட்சம் வரை மாலை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விலை வீழ்ச்சி

தற்போது பிளாஸ்டிக் மற்றும் காகித மாலைகள் வருகையால் நெட்டி மாலைக்கு இருந்த மவுசு குறைந்து விலை வீழ்ச்சி அடைகிறது. ஆனால் நாறு, வண்ண கலர்கள் என பல பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் நாங்கள் உற்பத்தி செய்யும் நெட்டி மாலைக்கு தான் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே மூல பொருட்களான நெட்டி விலையில்லாமல் கிடைக்க வழி வகை செய்திட வேண்டும். வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்தி தருவதுடன், அரசு நெட்டி மாலை தயாரிப்பதை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story