பெருந்துறை அருகே பரபரப்பு கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் உடைப்பு நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


பெருந்துறை அருகே பரபரப்பு  கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் உடைப்பு  நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 11 Dec 2022 1:00 AM IST (Updated: 11 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

ஈரோடு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் உடைப்பு ஏற்பட்டு 100-க்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

கரை உடைப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈரோடு ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு அருகே கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது.. இந்த வாய்க்காலின் தரை தளத்தில் கசிவு நீர் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென கசிவுநீர் கான்கிரீட் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்டு கசிவு நீர் செல்லும் பாதையில் தண்ணீர் புகுந்து வெளியேற தொடங்கியது.

இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் வாய்க்காலின் கரையிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இந்த தண்ணீர் பாலப்பாளையம், சின்னியம்பாளையம், கூரபாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம் ஆகிய கிராமங்கள் செல்லும் வழியில் உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

பயிர்கள் மூழ்கின

தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கின. சுமார் சுமார் 100-க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் மூழ்கியதாக விவசாயிகள் கூறினார்கள்.

மேலும் வாய்க்கால் மேட்டில் இருந்து பாலப்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் கூரபாளையம் செல்லும் தார் ரோடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ரோடுகளில் அரிப்பு ஏற்பட்டன.

இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு்ள்ளது.

இது தவிர வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட கரையின் எதிர்புற கரையிலும் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. அதன் வழியாகவும் தண்ணீர் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் அந்த கரை பெரிய அளவில் உடைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் பகுதியிலும் உடைப்பு

இந்தநிலையில் மாலை 6 மணி வரை கசிவு நீர் பாதையில் ஏற்பட்ட உடைப்பில் தண்ணீர் வெளியேறியது. 6.30 மணிக்கு மேல் கசிவுநீர் பாதையில் மேல் உள்ள கரையிலும் உடைப்பு ஏற்பட்டது.

5 அடி அகலத்திற்கு கரை உடைந்து, அதன் வழியாகவும் தண்ணீர் வெளியேறியது.

இதனால் கரை வழியாக தோட்டாணி, சின்னியம்பாளையம் சென்று வந்த பொதுமக்கள் மாற்று வழியில் செல்கிறார்கள்.

மீண்டும் சம்பவம்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்ட பிறகே வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படும் என்று தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அங்கு சென்று பார்த்தார்கள். மேலும் பெருந்துறை போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு் வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெருந்துறை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள். இதனை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்கள்.



Next Story