சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை
75-வது சுதந்திர தினம் இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தொடர் விடுமுறை வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்கள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்வதற்காக படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது.
தொடர் விடுமுறையையொட்டி நேற்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவி அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் நீச்சலடித்து குளித்தனர். பின்னர் அருவி பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று ஆகியவற்றை கண்டு ரசித்தனர். இதையடுத்து அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கோதையாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
போக்குவரத்து நெருக்கடி
அருவியில் குளிப்பதற்காக வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வாகனங்களில் திரண்டு வந்ததால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோரம் வரிசையாக நின்றிருந்ததை காண முடிந்தது.
இதுபோன்ற விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகமும், போலீசாரும் இணைந்து தீர்வு காண முன்வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
தொட்டிப்பாலம்
இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை, முட்டம், வட்டக்கோட்டை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
பொதுவாக குமரி மாவட்டத்துக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களோடு ஆன்மிக தலங்களுக்கும் சேர்ந்தே சென்று வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரியில் பகவதிஅம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.