வீட்டு திண்ணையில் இருந்தவர் வெட்டிக்கொலை
திருப்பாச்சேத்தியில் வீட்டு திண்ணையில் இருந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தியில் வீட்டு திண்ணையில் இருந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெட்டிக்கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள தென்திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற முத்துமுனியாண்டி (வயது 42). இவருக்கும், ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த பழனி என்ற பழனிசாமிக்கும் (33) முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தென் திருப்பாச்சேத்தியில் உள்ள தனது அக்காள் பாண்டியம்மாள் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பழனி, ராஜ்குமார் (30), விஜயகுமார் (25), மதி, மருது (36), நிதிஷ் ஆகியோர் கையில் வாள், சூரிக்கத்தி, அரிவாள் ஆகியவைகளை வைத்துக்கொண்டு சுரேசை ஆபாசமாக பேசி சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
4 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலையுண்ட சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, ராஜ்குமார், விஜயகுமார், மருது ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.