அடகு வைத்த நகைகளை ஏலமிட்டதால் வங்கியில் மயங்கி விழுந்த பெண்
அடமானம் வைத்த நகைகளை மீட்க வந்த போது ஏற்கனவே ஏலமிட்டு விட்டதால், வங்கியில் பெண் மயங்கி விழுந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கியில் நகைகள் அடகு
திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோட்டை அடுத்த கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். அவருடைய மனைவி செல்வராணி (வயது 43). இவர் திண்டுக்கல் நாகல்நகரில் அமைந்துள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் கடன் தொகையை செலுத்தி விட்டு நகைகளை மீட்பதற்காக செல்வராணி, தனது மகன் மணிகண்டனுடன் நேற்று வங்கிக்கு சென்றார். வங்கியில் நகை அடகு வைத்த சீட்டை அதிகாரியிடம் காண்பித்து, நகைகளை மீட்க வேண்டும் என்று தெரிவித்தார். அந்த சீட்டை வாங்கி பார்த்த அதிகாரி, நகைகள் ஏற்கனவே ஏலமிடப்பட்டு விட்டதாக கூறினார்.
மயங்கி விழுந்த பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராணி, தனக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பாமல் நகைகளை ஏலமிட்டது ஏன்? என்று கேட்டார். அப்போது நகைகளை ஏலமிடுவதற்கு முன்பு வங்கியில் இருந்து முறையாக நோட்டீஸ் அனுப்பி விட்டதாகவும், அதன்பின்னரும் நகைகளை மீட்க வராததால் நகைகளை ஏலமிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனை கேட்டதும், நகைகள் அனைத்தும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என செல்வராணி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது செல்வராணி திடீரென மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செல்வராணியை, அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். நகைகளை ஏலமிட்டதை கேட்டு பெண் மயங்கி விழுந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.