கோபுர கலசங்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவ ஏற்பாடு


கோபுர கலசங்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவ ஏற்பாடு
x

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது கோபுர கலசங்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவ கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

ஆலோசனை கூட்டம்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் பழனிக்கு வந்து கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தார். மேலும் பணிகள் தொடர்பாக அவ்வப்போது அலுவலர்களுடன் இணைந்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில் கும்பாபிஷேக திருப்பணிகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பக்தர்களை அனுமதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், திண்டுக்கல் கலெக்டர் விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களை எந்த வழியில் அனுப்புவது, அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இலவச பஸ் சேவை

இந்த கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் பகுதி, பகுதியாக படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர். முக்கிய பிரமுகர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மட்டும் ரோப்கார், மின்இழுவை ரெயிலில் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்கள் மீது பூக்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் சிறப்பு எந்திரம் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்காக கருப்பணகவுண்டன்வலசு பைபாஸ் சாலை அருகே தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து பக்தர்களை பழனிக்கு ஏற்றி வர 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதில், பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணிகளையும் கோவில், வருவாய், போலீஸ் துறையை சேர்ந்த அதிகாரிகள் குழுவாக இணைந்து செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

அன்னதானம்

இதேபோல் கும்பாபிஷேகம் அன்று அன்னதானம் வழங்குபவர்கள் உணவுத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ்குமார், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story