மாண்டஸ் புயலால் தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


மாண்டஸ் புயலால்   தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு:  கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயலால் தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

மாண்டஸ் புயலால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முன்னெச்சரிக்கை

வானிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறி வட தமிழக பகுதியில் தான் கரையை கடக்க இருக்கிறது. அதனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கனமழை இருக்காது.

இன்றைய வானிலை மாற்றத்தில் தூத்துக்குடியில் மிதமான மழை இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்காலத்தில் அதிகமான மழை பெய்யும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் மழைநீர் அதிகமாக தேங்கக்கூடிய 36 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 5 இடங்கள் அதிகம் பாதிப்படைய கூடிய இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 97 இடங்களில் நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, உணவு, குடிநீர் போன்ற அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

குளங்கள்

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட குளங்களும், ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் 400-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 647 குளங்கள் உள்ளன. அனைத்து குளங்களில் வரத்துக் கால்வாய்களையும், உபரிநீர் கால்வாய்களையும் தூர்வாரி வைத்துள்ளோம். குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அவசர தேவைக்காக மணல் மூட்டைகள், கம்புகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள காலத்தில் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக 300 தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். அவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி உள்ளோம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மாண்டஸ் புயல் தொடர்பாக மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்களையும், அந்தந்த பகுதிகளில் கரையேறி பாதுகாப்பாக இருக்க தகவல் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story