அய்யப்ப பக்தர்கள் வருகையால் திற்பரப்பு அருவி மீண்டும் 'களை' கட்டியது
அய்யப்ப பக்தர்கள் வருகையால் திற்பரப்பு அருவி மீண்டும் ‘களை’ கட்டியது. அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
அய்யப்ப பக்தர்கள் வருகையால் திற்பரப்பு அருவி மீண்டும் 'களை' கட்டியது. அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 16 நாட்கள் நீடித்தது. கடந்த திங்கட்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மீண்டும் 'களை' கட்டியது
ஆனாலும் கடந்த 4 நாட்களாக திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்ததோடு, வெறிச்சோடியும் காணப்பட்டது. தற்போது கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் மிதமாகப்பாய்கிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்ட அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் நேற்று திற்பரப்பு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனால் திற்பரப்பு அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் 'களை' கட்டியது.
சாமி தரிசனம்
அருவியில் குளித்தவர்கள் தொடர்ந்து நீச்சல் குளத்திலும் குளித்து விட்டு அருகில் உள்ள மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையிலும் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை அங்கு அதிகரித்ததால், கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.