ஆசைக்கு இணங்க மறுத்ததாக கள்ளக்காதலன் வாக்கு மூலம்
அணைக்கட்டு அருகே பெண் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்ததாக அவர் கூறி உள்ளார்.
பெண் பிணம்
அணைக்கட்டை அடுத்த அல்லேரிமலை வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (வயது 25). குமார் கடந்த வருடம் இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அவர் அல்லேரி மலைப்பாதையில் உள்ள ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவர்கள் அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல்
அவரை மர்ம நபர்கள் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதேப் பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகனான கூலித்தொழிலாளி சண்முகம் (30) என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மலரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
மலரின் கணவர் குமார் இறந்த பிறகு மலரும், நானும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தோம். இது எனது மனைவி அம்சாவுக்கு தெரிந்த உடன் அந்த உறவை துண்டித்து விட்டேன். சம்பவத்தன்று மலர் தனியாக அணைக்கட்டு செல்வதை அறிந்த நான், அவருக்கு போன் செய்து இருவரும் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். அதன் பிறகு அவரை நான் மலைப்பாதையில் சந்தித்தேன்.
ஆசைக்கு இணங்க மறுத்ததால்
அப்போது அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் இருந்த பெரிய கல்லால் அவர் தலை மீது ஓங்கி அடித்தேன். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே உடலை ஒரு புதரின் ஓரமாக தள்ளிவிட்டு நான் சென்று விட்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வாக்கு மூலத்தின் அடிப்படையில் சண்முகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். சண்முகத்திற்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.