புதுமைப்பெண் திட்டத்தால்கல்லூரி செல்லும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கலெக்டர்
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி செல்லும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் கல்லூரி செல்லும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
புதுமைப்பெண் திட்டம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உசி. பொறியியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்ட நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 572 மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்துக்கான வங்கி கணக்கு அட்டைகள் வழங்கப்பட்டன.
அதிக மாணவிகள்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 1,217 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக 572 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நமது மாநிலத்தில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு 51 சதவீதம் மாணவிகள்தான் உயர்கல்வி படிக்க கல்லூரிக்கு சென்று இருந்தனர். ஆனால் புதுமைப்பெண் திட்டம் வந்த பின்பு அதிகளவு மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்கின்றனர். மாணவிகள் கல்லூரி காலத்தில் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் 3 வருடத்துக்கும் மாதம் தோறும் ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் இந்த பணத்தை கல்வி செலவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சேமிப்பு பழக்கம்
மேலும் சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சேமிக்கும் தொகை உங்களது மேல்படிப்புக்கு பயன்படும். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து உள்ளார். மேலும் பெண்கள் முன்னேற்றத்துக்கும், குழந்தைகளின் நலனுக்கும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்' என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.