ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கரும்புகளுடன் ஊர்வலமாக வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்- போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கரும்புகளுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கரும்புகளுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 4 பேரும், 2-வது நாளான நேற்று முன்தினம் 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கட்சியினர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பூசாரி சென்னிமலை வீதியில் அமைக்கப்பட்டு உள்ள பணிமனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
பரபரப்பு
அப்போது நாம் தமிழர் கட்சியினர் கையில் கரும்புகளுடன் வந்தனர். மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் சவிதா சிக்னல் அருகில் வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கரும்புகளுடன் ஊர்வலமாக செல்லக்கூடாது' என்றனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு மாநகராட்சி அலுவலகம் நோக்கி சென்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் அவருடன் 4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் வழங்கினார்.
இதுவரை 20 பேர்
மேலும் தமிழ்தாயக மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் செய்தி தொடர்பாளர் முகமது ஹனீபா, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சார்பில் மாநில தலைவர் கபா காந்தி, உழைப்பாளி மக்கள் சார்பில் குப்புசாமி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் தலைவர் முகமது இலியாஸ், மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் பெர்னாண்டஸ், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் மகளிர் அணி பொறுப்பாளர் விஜயகுமாரி, தேசிய மக்கள் கழகம் சார்பில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் மற்றும் சுயேச்சைகளாக விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.