அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு; செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் அமர்ந்து ஓட்டு கேட்டார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஈரோட்டில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது செருப்பு தைக்கும் தொழிலாளிகளுடன் அமர்ந்து ஓட்டு கேட்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஈரோட்டில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது செருப்பு தைக்கும் தொழிலாளிகளுடன் அமர்ந்து ஓட்டு கேட்டார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அனைவரும் வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
தி.மு.க. முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் ஈரோட்டில் முகாம் போட்டு, தேர்தல் பிரசார பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோல் தமிழகம் முழுவதும் இருந்து காங்கிரஸ் கட்சியினரும் ஈரோட்டை நோக்கி வந்து தேர்தல் பிரசார பணியில் ஈடுபடுகிறார்கள்.
அதன்படி தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஈரோடு மாநகராட்சி 37-வது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வீதி வீதியாக சென்றார்.
செருப்பு தைக்கும் தொழிலாளி
ராஜாஜி புரம் பகுதிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடம் ஓட்டு கேட்டார். அதுமட்டுமின்றி, செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் தொழில் வாய்ப்புகள், வருமானம் உள்ளிட்டவற்றையும் கேட்டு அறிந்த அவர், அவர்களுடன் தரையில் உட்கார்ந்து பேசினார்.
இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் வர்த்தக அணி நிர்வாகி மாரியப்பன், சிவா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டேவிட் செல்வின் ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ராமஜெயம், அருணாச்சலம், செல்வக்குமார், கவுன்சிலர் தீபலட்சுமி அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் கட்சி மாதையன், வக்கீல்கள் கிருபாகரன், ரகுராமன், பாலமுருகன், வீரபாகு மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.