நெசவாளர்களுக்கு விரைவில் 1,000 யூனிட் இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


நெசவாளர்களுக்கு விரைவில் 1,000 யூனிட் இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x

நெசவாளர்களுக்கு விரைவில் 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

ஈரோடு

நெசவாளர்களுக்கு விரைவில் 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இலவச மின்சாரம்

அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் மேடை நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூறியபடி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் அளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளவானது 750 யூனிட்டில் இருந்து தற்போது 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுமதி

இதற்கான மானியத்தொகை தமிழக அரசு சார்பில் மின்வாரியத்திற்கு செலுத்தப்படும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட விசைத்தறி கூடங்களுக்கான மின்கட்டண விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணமான ரூ.1.40 பைசாவில் இருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோப்புகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு உள்ளார். ஆனால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு இதற்கான அரசாணை வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


Next Story