ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 5-வது நாளாக 7 சுயேச்சைகள் உள்பட 10 பேர் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட 5-வது நாளாக நேற்று 7 சுயேச்சைகள் உள்பட 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட 5-வது நாளாக நேற்று 7 சுயேச்சைகள் உள்பட 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 5-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது.
விஷ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வேலுமணி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியை சேர்ந்த வின்சென்ட், இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
46 பேர் வேட்புமனு தாக்கல்
மேலும் சுயேச்சை வேட்பாளர்களாக சென்னையை சேர்ந்த ஆறுமுகம், ஈரோடு மோளகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த நரேந்திரநாத், கோவை மாவட்டம் போடி திம்பம் பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள சேரம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார், ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முத்துபாவா, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோடு பகுதியை சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி, ஈரோடு நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என நேற்று ஒரே நாளில் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விதவை வேடம் அணிந்த சுயேச்சை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி நேற்று 5-வது நாளாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அப்போது சென்னையை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் விதவை வேடம் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் சாதாரண உடை அணிந்துவந்து, மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நான் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக பாட்டில் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று (அதாவது நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன். எதற்காக விதவை கோலத்தில் வந்தேன் என்றால், அதிக அளவில் மது விற்பனை செய்ததற்காக டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு, கரூரில் நடந்த குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுவை குடித்து இறந்தவர்களின் மனைவிகள் விதவைகளாக அதிக அளவில் உள்ளனர். எனவே இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நான் எம்.எல்.ஏ. ஆனால் மது குடித்து இறந்த விதவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
டாஸ்மாக் மதுவினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்களுக்கு விதவை சான்றிதழ் வழங்கிடவும், டாஸ்மாக் கடைகளில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி ரசீது (பில்) வழங்கவும், குடிபோதை மறுவாழ்வு மையங்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் திறக்க குரல் கொடுப்பேன்.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டமன்றத்தில் விதவைகளுக்காக குரல் கொடுக்க தயார் என்றால் நான் எனது மனுவை வாபஸ் பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.