சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு


சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
x

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணும் மையம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு முடிந்ததும் போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. அங்கு வருகிற மார்ச் மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்தநிலையில் ஓட்டு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், செலவின பார்வையாளர் கவுதம்குமார், போலீஸ் துறை பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த ஆய்வின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ள அறைகள், தபால் ஓட்டு பெட்டிகள் வைக்கும் இடம், ஓட்டுகளை எண்ணும் அறைகள் ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது ஓட்டு எண்ணும் மையத்துக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து செல்லக்கூடிய வழிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்கள், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படக்கூடிய இடம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் பார்வையிட்டார். அப்போது, புகார் பதிவு ஆவணங்கள், ஊடக கண்காணிப்பு அறை, வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான செலவின தொலைக்காட்சி கண்காணிப்பு அறை ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மீனாட்சி, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் கவுரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story