ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 'கை' சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 'கை' சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 'கை' சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

பூரண கும்ப மரியாதை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அதன்படி நேற்று ஈரோடு மாநகராட்சி 23-வது வார்டில் பாவேந்தர் வீதி, கம்பர் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பெண்கள் அவர் மீது மலர் தூவியும், வீட்டின் முன்பு கோலமிட்டும், ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.

மகத்தான வெற்றி

முன்னதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.தலைவரும், தமிழகத்தின் முதல் -அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் ஆதரவு கேட்டு 23-வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வாக்குகள் சேகாித்து வருகிறோம்.

முதல் -அமைச்சர் ஆட்சியின் சாதனை திட்டங்களுக்கு ஒரு மணி மகுடமாக நடைபெறுகின்ற தேர்தலில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் வகையில் மிக எழுச்சியான ஒரு வரவேற்பை தந்துள்ளனர். வருகிற 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவன் மகத்தான வெற்றியை பெறுவார்.

இரட்டை இலை

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்களால் மக்கள் கவரப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் எந்த மாற்றமும் ஏற்படாது. கடந்த சட்டசபை தேர்தலின்போதும், அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டனர். அப்போதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் மக்கள் வாக்களித்தனர்.

மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தான் மக்கள் வாக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மாநகராட்சி தேர்தலிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டனர். எத்தனை மாநகராட்சியை அவர்கள் கைப்பற்றினார்கள். இப்போது கூட, எடப்பாடி பழனிசாமியை, பன்னீர் செல்வம் சந்திப்பாரா அல்லது பன்னீர் செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா என்பதை பற்றி விவாதிக்கின்றனர். இவர்கள் சந்தித்தால், நாட்டின் பொருளாதாரம் 100 மடங்கு வளர்ச்சி அடைந்து மக்கள் சுபிட்சமாகி விடுவார்களா? அல்லது இலங்கை பிரச்சினைக்கு தான் தீர்வு வந்துவிடுமா. என்ன ஆகப்போகிறது.

இது பெரியார் மண். இங்கு போட்டி என்பதே இல்லை. எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர்கள் கூறட்டும். டி.டி.வி.தினகரன் கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 1,500 வாக்குகள் பெற்றனர். அதைவிட நோட்டோ அதிகமாக வாக்குகள் பெற்றது. அதை அறிந்து முக்கியத்துவம் கொடுங்கள். தி.மு.க.வில் ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை கேட்டு செல்லுங்கள். உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றார்கள் என்தையும் கேட்டு செல்லுங்கள்.

இந்த தேர்தலில் மட்டுமல்ல. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், 39-க்கு 39 தொகுதியும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். ஈரோடு கிழக்்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவது குறித்து மூத்த அமைச்சர்கள் தெரிவிப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அப்போது அவருடன் வீரப்பன்சத்திரம் பகுதி தி.மு.க. செயலாளர் வி.சி.நடராஜன், கவுன்சிலர்கள் மல்லிகா நடராஜன், தங்கமணி உள்பட் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story