ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலை பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம், கருங்கல்பாளையம் ஓம் காளியம்மன் கோவில் பகுதி, காந்தி சிலை பகுதி ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தடுக்க முடியாது
ஈரோட்டில் 30 அமைச்சர்களை எதிர்த்து நமது கூட்டணி கட்சியினர் களப்பணியாற்றி வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வினர் ஒவ்வொரு வாக்காளர்களையும் அழைத்து பட்டியில் அடைத்து வைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. 22 மாதங்களில் ஆட்சி நடத்தி தி.மு.க. தமிழகத்தை இருண்டகாலமாக மாற்றிவிட்டது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைபோல குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த 517 திட்டங்களில் 49 மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. 80 சதவீதம் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கூறி வருகிறார்கள்.
தலை எழுத்தை...
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற தகுதி மட்டும்தான் இருக்கிறது. அந்த கட்சியில் சாதாரண தொண்டன் பதவிக்கு வரமுடியாது.
கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்தியாவின் நிலை எப்படி இருந்தது. பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற பிறகு 16-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி அமைக்க இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பி.களுடன் பெரும்பான்மை ஆட்சி அமைப்போம். தமிழகத்தில் இருந்து நமது கூட்டணியை சேர்ந்த 39 எம்.பி.க்கள் டெல்லி செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தங்கமணி, வேலுமணி மற்றும் சரஸ்வதி எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாவட்ட தலைவர் விவசாயிகள் அணி மாநில துணைச்செயலாளர் தங்கராஜ், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணாமலை பேசும்போது, தி.மு.க. தேர்தல் பணிமனையில் மக்கள் இருந்ததாக கூறப்பட்ட புகைப்படங்களை அவர் காண்பித்தார்.