ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்- பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேச்சு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்- பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேச்சு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஜி.கே.வாசன் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், கள்ளுக்கடைமேடு ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்பட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

பாடம் கற்பிக்க வேண்டும்

கொரோனா காலத்துக்கு பிறகு தற்போதுதான் மக்கள் பொருளாதாரத்தில் சற்று உயர்ந்து வருகிறார்கள். அதற்குள் வீட்டு வரி, மின் கட்டணம், பால் கட்டணம் ஆகியன உயர்த்தப்பட்டு மும்முனை தாக்குதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் உயர்ந்து வந்த மக்களுக்கு சுமையை ஏற்றி மீண்டும் ஏழையாக மாற்றிய பெருமை தி.மு.க.வுக்கு சேரும்.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. எனவே வெற்று வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு இந்த இடைத்தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், காமராஜர், த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில நிர்வாகி சி.எஸ்.கவுதமன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story