ஒருவிரல் புரட்சியால் மட்டுமே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நிலைமையை மாற்ற முடியும்- ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


ஒருவிரல் புரட்சியால் மட்டுமே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நிலைமையை மாற்ற முடியும்- ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நிலைமையை மாற்ற ஒருவிரல் புரட்சியால் மட்டுமே முடியும் என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ஈரோடு

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நிலைமையை மாற்ற ஒருவிரல் புரட்சியால் மட்டுமே முடியும் என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இடைத்தேர்தல்

தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்தை ஆதரித்து கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 3-வது நாளாக நேற்று குமலன்குட்டை, சம்பத்நகர் நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அதைத்தொடர்ந்து அவர் சூரம்பட்டி நால்ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக குமலன்குட்டை பகுதியில் பொதுமக்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி உருவானபோது முதல் முறையாக வெற்றி பெற்றது நமது முரசு சின்னம்தான். அதேபோல் இந்த இடைத்தேர்தலிலும் தே.மு.தி.க. வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பெற நீங்கள் அனைவரும் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். நமது வேட்பாளர் இந்த ஊரைச்சேர்ந்தவர். உங்களுக்கு உழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது போட்டியிடும் வேட்பாளர்கள் 2 பேரும் வயதானவர்கள். அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை. ஆனால் நம்முடைய வேட்பாளர் சுறுசுறுப்பாக மக்களை சந்தித்து வருகிறார். அவருக்கு மக்கள் இடத்தில் நல்ல பெயர் உள்ளது.

இதுவரை எந்த ஒரு வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. மாறாக மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு உயர்வுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒருவிரல் புரட்சி

வறுமை கோட்டுக்கு கீழே யாரும் இல்லாத நிலையை உருவாக்குவேன் என்று கூறியவர் விஜயகாந்த். கோபிசெட்டிபாளையத்தில் உணவு இல்லாமல் 2 பேர் இறந்துள்ளனர். இதை கேட்டு விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார். இனி தமிழ்நாட்டில் இதுபோன்று பசி பட்டினியால் யாரும் இறக்கக்கூடாது. மக்கள் தற்போதும் வறுமை, கஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாற ஒருவிரல் புரட்சியால் மட்டுமே முடியும். எனவே நீங்கள் வாக்களிக்கும்போது ஒரு நிமிடம் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அப்போது அவருடன் மாநில துணைச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் கட்நி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story