தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது- ஈரோட்டில் மா.சுப்பிரமணியன் பேட்டி


தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது- ஈரோட்டில் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது என்று ஈரோட்டில் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஈரோடு

தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது என்று ஈரோட்டில் மா.சுப்பிரமணியன் கூறினார்.

வரலாற்று சாதனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஈரோடு கமலா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் தி.மு.க. அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்-அமைச்சரின் சாதனைகளை எடுத்து கூறி வாக்குகள் சேகரித்து வருகிறோம். முதல் -அமைச்சரை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பார்.

அருகதை கிடையாது

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக யார் புகார் அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சைதாப்பேட்டை தேர்தலின்போது அப்போது இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்ததை மக்கள் யாரும் மறக்கமாட்டார்கள். அப்போது தமிழகம் பீகாராக மாறியது என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது. எனவே தேர்தல் விதிமீறல் பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்தஒரு விதிமுறைகளும் மீறப்படவில்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

முதன்மை மாநகராட்சி

கடந்த 2007-ம் ஆண்டு கருணாநிதி முதல் -அமைச்சராக இருந்தபோது ஈரோட்டை மாநகராட்சியாக அறிவித்தார். ஈரோடு மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 இடங்களில் பெரிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.480 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்மை மாநகராட்சியாக ஈரோடு மாநகராட்சியை தரம் உயர்த்த தேர்தல் முடிந்தவுடன் மேலும் ரூ.500 கோடி நிதியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்க உள்ளார். ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க. அரசு தான். எனவே நீங்கள் அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அப்போது அவருடன் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story