மூட்டை, மூட்டையாக ஏரியில் கொட்டப்பட்ட முட்டைக்கோஸ்


மூட்டை, மூட்டையாக ஏரியில் கொட்டப்பட்ட முட்டைக்கோஸ்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டையில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மூடை, மூட்டையாக முட்டைக்கோஸை ஏரியில் கொட்டி சென்றனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டையில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் முட்டைக்கோஸை ஏரியில் கொட்டி சென்றனர்.

முட்டைக்கோஸ் சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மாற்று பயிராக காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனா். இவற்றை அறுவடை செய்து ராயக்கோட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இவற்றை வியாபாரிகள் வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். இதனிடையே ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூட்டை, மூட்டையாக காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

இதனால் மார்க்கெட்டுக்கு முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரகத்திற்கு ஏற்ப முட்டைக்கோஸ் விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு மூட்டை ரூ.200-க்கும், ஒரு கிலோ சிறிய முட்டைக்கோஸ் ரூ.4-க்கும், 2 கிலோ கொண்ட முட்டைக்கோஸ் ரூ.7-க்கும் விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் ஏாிகளில் முட்டைக்கோசை கொட்டி செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ராயக்கோட்டை பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முட்டைக்கோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் ஏரிகளில் கொட்டி செல்கின்றனர். சிலர் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story