கோத்தகிரியில் நோய் தாக்கியதால் முட்டைகோஸ்கள் விளைச்சல் பாதிப்பு-விவசாயிகள் கவலை
கோத்தகிரியில் முட்டைகோஸ்களை நோய் தாக்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் முட்டைகோஸ்களை நோய் தாக்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கொள்முதல் விலை குறைந்தது
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், நூர்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனைக்காக உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அங்கிருந்து மாநிலத்தின் பிறபகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா, கதவுத் தொரை, கட்டபெட்டு குடுமனை, காக்கா சோலை, குருக்குத்தி, காவிலோரை, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
முட்டை கோஸ் பயிர்கள் வழக்கமாக 90 நாட்கள் முதல் 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு கிலோ முட்டைகோஸ் பயிரிட 6 ரூபாய் முதல் 7 ரூபாய் மூலதன செலவு தேவைப்படும். ஆனால் தற்போது காய்கறி மண்டிகளில் முட்டை கோஸ் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து கிலோவுக்கு 4 ரூபாய் முதல் 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு கொள்முதல் செலவு கூட கிடைக்காமல், பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
நோய் தாக்குதல்
இது குறித்து நெடுகுளா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:- விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்ட இன்னல்களை எதிர்கொண்டு, வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவிற்கு கட்டுப்படியாகும். கடந்த ஆண்டு முட்டை கோஸ் கிலோ 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு தற்போது 6 முதல் 7 ரூபாய்க்கு மட்டுமே கோஸ் கொள்முதல் செய்யப்படுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக முட்டை கோஸ் பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் புது வகையான நோய் தாக்குதல் ஏற்பட்டு அதன் இலைகள் பழுக்கத் தொடங்கி தோட்டம் முழுவதும் பரவி விடுகிறது. எனவே அதனைக் கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயங்குகின்றனர். மேலும் சாதரணமாக கொள்முதல் விலை குறையும் நேரத்தில் முட்டை கோசை 10 நாட்கள் வரை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும். ஆனால் நோய் தாக்குதல் காரணமாக அவ்வாறு செய்ய முடிவதில்லை. தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் மெக்னீசியம் குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி தோட்டக்கலை துறை அதிகாரிகள் இது குறித்து ஆராய்ச்சி செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.