கன்று வீச்சு நோய் சிறப்பு தடுப்பூசி முகாம்
தூத்துக்குடியில் கன்று வீச்சு நோய் சிறப்பு தடுப்பூசி முகாம் வியாழக்கிழமைதொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கன்று வீச்சு நோய் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. வருகிற பிப்.28-ந் தேதி வரை முகாம் நடக்கிறது.
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் முதலாவது சுற்று கன்று வீச்சு நோய் (புரூசெல்லாசிஸ்) சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் இந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நோய் புரூசெல்லா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்த நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பல காரணங்களினால் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த நோய் மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது. இந்த நோயை தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒருமுறை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும்.
அறிகுறிகள்
இந்த நோய் தாக்கிய மாடுகளில் கருப்பையில் நோய் ஏற்படும் காரணத்தினால் சினை மாடுகளில் கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்று வீச்சு ஏற்படும். கன்று வீச்சு ஏற்பட்ட பின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து வெளிவராமல் தங்கிவிடும். பெண் பிறப்புறுப்பில் இருந்து சீழ் போன்ற திரவம் வடியும். மேலும் மூட்டு வீக்கம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும். கன்றுகள் பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும். இந்த நோய் தாக்குதலினால் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும்.
எனவே கால்நடை வளர்ப்போர் இந்த முகாமை பயன்படுத்தி எந்தவித விடுதலும் இன்றி தங்கள் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.