கால் டாக்சி டிரைவர் பலி
வடமதுரையை அருகே ேமாட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கால் டாக்சி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்தவா் சதீஷ் (வயது 39). கால் டாக்சி டிரைவர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூரை சேர்ந்தவர் சுதாகர் (24). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் குளித்தலையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோர்பட்டி பிரிவு அருகே சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார். சுதாகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.