ஆக்கிரமிப்பு என கூறி புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர ஜல்லிக்கற்களை அகற்றிய வனத்துறையினர்
கூடலூர் அருகே ஆக்கிரமிப்பு என கூறி புதிதாக அமைக்கப்பட்ட சாலையை வனத்துறையினர் வெட்டி அகற்றினர்
கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் சுருளியாறு நீர் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், இரவங்கலாறு அணை நீர்த்தேக்கங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்கு 24 ராட்சத இரும்பு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் மின்வாரிய ஊழியர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ தேவைக்கு கூடலூர், கம்பத்திற்கு செல்ல வேண்டும். இதற்கிடையே சுருளியாறு மின்நிலையம் பகுதியில் இருந்து வனத்துறை சோதனைச்சாவடி வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை சேதம் அடைந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து கடந்த வாரம் அங்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து தார்சாலை அமைத்ததாக கூறி சாலையோரங்களில் ஜல்லிக்கற்களை வனத்துறையினர் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.