திசை தெரியாத பயணத்தில் கால்டாக்சிகள்


திசை தெரியாத பயணத்தில் கால்டாக்சிகள்
x

திசை தெரியாத பயணத்தில் கால்டாக்சிகள்

மதுரை

தற்போது கொரோனாவுக்கு முன்பு- கொரோனாவுக்கு பின்பு என 2 வகையாக காலத்தையும், மனிதனின் வாழ்க்கை முறைகளையும் பிரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு கொரோனா, உலக மக்களை பாடாய்படுத்தி விட்டது. அதன் கோரத்தாண்டவத்தில் இருந்து இப்போதுதான் எல்லா தொழில் துறையினரும் மீண்டு(ம்) வருகிறார்கள்.

மதுரையை பொறுத்தமட்டில் ரெயில், பஸ் மக்களுடைய போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அவை செல்லும் வழித்தடங்களை தவிர பிற பகுதிகளுக்கு அதாவது குறுகலான தெருக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தார்கள். பொது போக்குவரத்தை தாண்டி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு நள்ளிரவு நேரத்திலும் ஆட்டோக்கள் தான் கைகொடுத்தன. அதேசமயத்தில் ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பயணிகளிடம் இருக்கிறது. இந்த மனக்குமுறல் பயணிகளிடம் இருந்து வந்த நிலையில்தான், 'கால் டாக்சி'கள் தடம் பதித்தன.

செல்போன்களின் வருகை அதிகரிப்பால், ஒரு நிமிடத்தில் ஆட்டோ, காரை புக் செய்து விடலாம். அவ்வாறு செய்து விட்டால் அடுத்த சில நிமிடத்தில் காரோ, ஆட்டோவோ நம் வீட்டின் முன்பு வந்து விடுகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றார்போல், தனியார் ஆட்டோ, கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிவீசின.. இருப்பினும் கால் டாக்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் நிலை உள்ளது. மேலும் கால் டாக்சி பயணிகளுக்கும் சில குறைகள் இருக்கதான் செய்கிறது. இதுபற்றிய அவர்களின் கருத்துகளை பார்க்கலாம்...

திருநகர் டிரைவர் சுப்பிரமணி:

பி.டெக். சிவில் படித்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக கால் டாக்சி ஆப் மூலம் வாகனம் ஓட்டி கொண்டிருக்கிறேன். கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு வரை எங்களுக்கு சவாரியை பொறுத்து இன்சென்டிவ் கிடைத்தது. ஆனால், தற்போது அந்த வருமானமும் கிடையாது. அதுதவிர எங்களுக்கு கிடைக்கும் பணத்தில் 30 சதவீதத்தை அந்த நிறுவனத்தினர் எடுத்து விடுகின்றனர். அதன் மூலம் எங்களுக்கு வருமானம் குறைகிறது. இதுபோல், எங்களது சம்பளம், வாகன தேய்மானம், இன்சூரன்ஸ் போன்ற பல சிக்கல்கள் இருக்கிறது. காலையில் 8 மணி முதல் இரவு 8 மணி வரை பணி செய்வேன். சுபமுகூர்த்த நாட்களில் கூடுதலாக சவாரி வரும். கொரோனாவுக்கு பின்னர் சரிவர வாகன இயக்கம் இல்லாததால் பெரும்பாலானவர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். பெட்ரோல்- டீசல் விலை உயர்வும் இருக்கிறது. மேலும் பழைய வாடகை கட்டணமும் எங்களுக்கு ஒரு பாதிப்பு தான்.

பைக்கரா முருகன்:

ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என நினைத்து இந்த வேலைக்கு வந்து விடுகின்றனர். மற்ற வாகன ஓட்டுனர்களை காட்டிலும் நாங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கிறது. அவ்வாறு உழைத்தால் மட்டுமே எங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் மூலம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். எந்த சவாரிக்கு சென்றாலும், அதில் கிடைக்கும் பணத்தில் 12 சதவீதத்தை எங்களின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். இதுபோல், ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுக்கான சதவீதத்தை நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பு அதிக அளவு வாடிக்கையாளர்கள் இந்த வாகன சேவையை பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது அப்படி கிடையாது.

ரெயில் நிலைய டாக்சி டிரைவர் நாகராஜன்:

கடந்த 5 வருடங்களாக மதுரை ரெயில் நிலைய பகுதியில் டாக்சி டிரைவராக உள்ளேன். ஆப்பில் புக் செய்து வாகனம் ஓட்டுபவர்கள் அதிக அளவில் வந்து விட்டதால் எங்களுக்கும் அதிக அளவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வாடிக்கையாளரை விட்டு விட்டு வரும் போது யாரையும் அழைத்து வருவது கிடையாது. ஆனால் கால் டாக்சியில் அப்படி இல்லை.

தனியார் வாகன டிரைவர்கள் தங்கபாண்டி, சுப்பிரமணிய சாமி :-

வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் காரை புக் செய்தால், அடுத்த 5 முதல் 10 நிமிடத்தில் நாங்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். கார் டிரைவரின் புகைப்படம், போன் நம்பர், கார் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது எவ்வளவு நேரத்தில் வரும் என்ற விவரம் அனைத்து விவரங்களும் ஆப் மூலம் தெரிகிறது. நினைத்தால் கேன்சல் செய்து கொள்ளலாம். டிரைவர் நடத்தை சரியில்லை என்றால், அதே ஆப்பில் புகாரும் செய்து கொள்ளலாம். ஒரு சில ஆப்பை பொறுத்தவரை, டிரைவர்கள் சொந்த வண்டி வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதில் ஒரே ஒரு வசதிதான், நினைத்த நேரத்தில் பணி செய்யலாம். தேவைப்பட்டால் விடுமுறை எடுத்து கொள்ளலாம். அந்த ஒரு வசதி தான் எங்களுக்கு நிம்மதி. கொரோனா காலத்தில் வாகனத்தின் கடன் தொகை 6 மாதங்களுக்கு வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதும் அந்த பணத்திற்கான வட்டியை கட்டி கொண்டு தான் இருக்கிறோம். கொரோனாவால் எங்களை போன்ற டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன இயக்கமும் குறைந்த அளவே இருக்கிறது.


Next Story