இலவச உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்


இலவச உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்
x

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற 2-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது.

சிவகங்கை

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற 2-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிறப்பு முகாம்

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது, அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவித்திறனற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற 2-ந் தேதி திருப்பத்தூரிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும், 4-ந் தேதி மானாமதுரையிலும், 5-ந் தேதியன்று திருப்புவனத்திலும், 6-ந் தேதி இளையான்குடியிலும், 10-ந் தேதி தேவகோட்டையிலும், 11-ந் தேதி கண்ணங்குடியிலும், 12-ந் தேதி சாக்கோட்டையிலும் நடக்கிறது.

பயனடையலாம்

மேலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதுாரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கையிலும் முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமானது ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, ஆதார் அட்டை, மாவட்ட நிலை அலுவலர்கள் வழங்கிய வருமானச்சான்று அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான ரேஷன் கார்டு அல்லது மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை அல்லது இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, தேசிய சமூகநல உதவித்திட்ட அடையாள அட்டை அல்லது மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story