பொது வினியோக திட்டம் தொடர்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடக்கிறது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை சரி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது வினியோக திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் சென்னசந்திரம், ஊத்தங்கரை தாலுகா இளவம்பாடி, போச்சம்பள்ளி தாலுகா நாகரசம்பட்டி, பர்கூர் தாலுகா மருதேப்பள்ளி, சூளகிரி தாலுகா பீர்ஜேப்பள்ளி, ஓசூர் தாலுகா தொரப்பள்ளி, தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை டவுன், அஞ்செட்டி தாலுகா தக்கட்டி ஆகிய 8 இடங்களில் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படும் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.