தர்மபுரியில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் தர்மபுரி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழில் பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்கிறார்கள். ஐ.டி.ஐ. பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் ஐ.டி.ஐ.யில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து பிரிவு பயிற்சியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தொழில் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். ஐ.டி.ஐ. பயிற்சி முடித்து இதுவரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாதவர்களும் தொழில் பழகுனர் பயிற்சி பெற தயார் நிலையில் உள்ளவர்களும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தர்மபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.