பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
குறைதீர்க்கும் முகாம்
தமிழக காவல்துறை டி.ஜி.பி. மாவட்டங்கள்தோறும் காவல்துறையின் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்த உத்தரவிட்டு உள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று முதல் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள், புகார்களை மனுக்களாக அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மனுக்கள்
இதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு, டி.ஜி.பி., மாவட்ட காவல் அலுவலகம், போலீஸ் நிலையங்களில் மொத்தம் ஆயிரத்து 415 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மீது அந்தந்த பகுதி போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையில் பொதுமக்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளதா அவர்களுக்கு காவல்துறையின் நடவடிக்கைமேல் திருப்தி ஏற்பட்டுள்ளதா என கருத்து கேட்கப்பட்டது. அப்போது ஆயிரத்து 259 பேர் திருப்தியாக இருந்ததாக தகவல் அளித்தனர். 150 பேர் தங்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை என்று தகவல் தெரிவித்தனர்.
நடவடிக்கை
நிலப்பிரச்சினை உள்ளிட்ட ஒருசில பிரச்சினை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுபோன்ற தகவல் தெரிவித்தவர்களை அழைத்து அவர்களுக்கு அடுத்த கட்டமாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அளவில் விசாரித்து தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முகாம் நடைபெற்றது. 2 வார காலத்திற்குள் மனுக்களை விசாரித்து தீர்வு காண உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த முகாமில் தாங்கள் அளித்த மனு விசாரணையில் திருப்தி இல்லை என்று கருத்து கூறியவர்களின் 31 மனுக்கள் மற்றும் புதிதாக 10 மனுக்கள் என மொத்தம் 41 மனுக்கள் பெறப்பட்டு உடனடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுஉள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் பிரிவு தொடங்கப்பட்ட இந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்து 724 புகார்கள் பெறப்பட்டு அதில் ஆயிரத்து 18 புகார்கள் மீது மனு ரசீது வழங்கப்பட்டு உள்ளது. 98 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மொத்த இழப்பு
2 ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்களின் மொத்த இழப்பு தொகை ரூ.3 கோடியே 11 லட்சத்து 8 ஆயிரத்து 79 ஆகும். இதில் உடனடி நடவடிக்கையாக ரூ.72 லட்சத்து 10 ஆயிரத்து 347 தொகை மோசடி நபர்களிடம் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் ரூ.15 லட்சத்து 91 ஆயிரத்து 660 தொகை சைபர் கிரைம் உதவியால் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பண மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக் குறைவாக பண மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் செய்தால் பணம் திரும்ப பெற வழி உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.