கும்பலபாடியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 233 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவி-கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி:
கும்பலபாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 233 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் அருகே உள்ள கும்பலபாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டா, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைகள், முதியோருக்கு உதவித்தொகை, ஆதி திராவிட நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு இ-பட்டா, 41 விவசாயிகளுக்கு பயிர் கடன், மாணவ-மாணவிகளுக்கு நிதி ஆதரவு உதவித்தொகை உள்பட மொத்தம் 233 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 89 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோரிக்கை மனுக்கள்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அங்கு அரசின் அனைத்து துறை அலுவலர்களையும் அழைத்து சென்று அனைத்து துறை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி, கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய நிகழ்வாக மக்கள் தொடர்பு முகாமை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
உரிய ஆவணங்கள்
பொதுமக்கள் அரசின் பல்வேறு துறை திட்டங்களை அறிந்து கொண்டு அவற்றின் மூலம் பயன்பெற முன்வர வேண்டும். பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டு, இப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.
முகாமில் தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், துணைத் தலைவர் சரஸ்வதி முருகசாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.