பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் கிராம குடிநீர் வழங்கல், சுகாதார உறுப்பினர்களுக்கான குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தராம விஜயரங்கன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி தேவன் முன்னிலை வகித்தார்.
முகாமில் ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், சுகாதார குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்வது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தண்ணீரின் தரம், தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்கள், தண்ணீர் மாசு ஆகியவை குறித்து மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராஜேஷ், வட்டார மேலாளர் அருண்குமார், பயிற்றுனர் சுகானந்தன் ஆகியோர் செய்முறை விளக்கம் அளித்தனர். முடிவில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நீர் ஆய்வு பெட்டி, கையேடு வழங்கப்பட்டது.