வேலைவாய்ப்பு முகாம்
சிறைத்துறை குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்றதற்கு பின் சிறை காவலர் நலன் மற்றும் சிறைவாசிகளின் நலனில் கவனம் செலுத்தி பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதில் இன்டர்காம் போனில் கைதிகளுடன் அவர்களது குடும்பத்தினர் பேசுதல், கைதிகளுக்கான சிறப்பு டிஜிட்டல் நூலகத்திட்டம் போன்ற பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அதன் அடுத்த கட்டமாக சிறை துறையினரின் குடும்பங்களில் படித்துவிட்டு பணி வாய்ப்புக்கென காத்திருப்போர் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை மதுரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றுடன் சிறைத்துறையும் இணைந்து முதன்முறையாக இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. அதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுக்கக்கின்றனர்.
இது குறித்து மத்திய சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழக காவல்துறையினர் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு முகாம் அவ்வப்போது நடக்கிறது. தற்போது சிறைத்துறையும் இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். கல்வி தகுதிக்கேற்ப வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க விரும்புவோருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் சார்பில் 3 நாள் இலவச பயிற்சி காமராஜர் பல்கலைக்கழக அரங்கில் நடக்கிறது என்று கூறினார்.